22 May 2010

அன்புத்தங்கைக்கு...


அன்புத்தங்கைக்கு...

- அவினேனி நா.பாஸ்கரன்

இந்த அக்டோபரோடு
இருபத்தி ஒன்றாகிறது உன் அகவை
கடந்து செல்லும் அத்தனை
ஆட்டோக்களும் நினைவுபடுத்துகின்றன
உனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டிய
கடமையை

நன்றாகப் படித்து
பட்டமும் பெற்றுப் பணிக்கும்
செல்கின்றாய் - கைநிறைய
காசும் பெறுகின்றாய்

எப்படித் தேடுவேன்
யார் நல்லார் என்று ?
எங்கு பார்ப்பேன்
உன்னை மனங்கலங்காமல்
கவனிக்கும் ஓர் உயரிய ஆண்மகனை ?

எவரையேனும் காதலிக்கிறாயா என்றேன்
நீ காதலிக்கும் அளவுக்கு நேர்த்தியான
ஆண்மகனை சந்திக்கவில்லையென்றாய்

என் நண்பர்கள் யாருக்குமே
உனை மணக்கும் தகுதி இல்லை
உன்னுடைய நண்பர்களையும்
பரிசீலனை செய்துப் பார்த்தேன்
ஒருவரும் தேறவில்லை

இலட்சங்களும் தங்க ஆபரணமும்
கேட்கும் நபர்களை ஆண்கள் என்றே
ஏற்க இயலவில்லை என்னால்

அன்றாடம் காய்ச்சியாய் வாழும்
சில நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள்தான்
ஆனால் உனை இராணியாய் வைத்துகாக்க
இயலாது அவர்களால்
ஊண் வருத்தி நீ சிரமப்படுவதை
சகிக்க முடியாது என்னால்

நம் வீட்டில் ஒன்றும் தங்கத்தட்டில்
உண்ணும் செல்வச் செழிப்பு இல்லைதான்
பருத்தியாடைகளும் கேழ்வரகு கூழுமாய்த்தான்
வளர்ந்தாய்
செல்லுமிடத்திலாவது நீ செழித்திருக்க
வேண்டுமென விரும்புகிறது நெஞ்சு

அதற்கே தேடுகிறேன்
அன்பும் பண்பிலும் செல்வச்செழிப்பிலும்
சிறந்திருக்கும் சான்றோனாய்

இராமனே பிறப்பெடுத்து வந்தாலும்
மறுத்துவிடுவேன் - மென்மையான
உன்னால் இயலாது தங்கையே
பிரச்சினைகள் பலவற்றில் போராடிச்
சீதையாய் சிதிலப்பட

'போராடுவதுதான் வாழ்க்கை ' என்
கருத்தை எனக்கே சொல்கிறாயா ? - அது
உனக்கல்ல என் அன்புத்தங்கையே...
எனக்கும் என்னைத்
தொடர்வோர்க்கும் மட்டும்தான்.

-------------------------------------------------------------------------------------------

Published in Thinnai.com on 19 August 2001 

Original Link :  http://www.thinnai.com/?module=displaystory&story_id=30108196&format=html

Here is the PDF version if you are unable to see the fonts properly -

http://www.mediafire.com/?hiiznwmmyyw

No comments: